பாட்டும், பட்டுச் சேலையும்... பாடகிகளின் ஃபேவரிட் பட்டுப் புடவைகளின் கதை!
மார்கழி மாதம், இசை மாதம். டிசம்பர் மாத கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், பாடகிகளின் குரலுடன், அவர்கள் உடுத்தியிருக்கும் பட்டுப்புடவைகளும் கவனம் பெறும். தங்களின் பட்டுப்புடவை காதல் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், இந்தப் பாடகிகள்!

சுதா ரகுநாதன்
''என் கச்சேரியில் என் பாட்டை மிகவும் ரசித்து அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர், என் பட்டுப் புடவைகளையும் ரசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ' 'அடுத்த கச்சேரிக்கு சுதா எந்த கலர் பட்டு கட்டுவாங்க?'னு நாங்க ஆர்வமா இருப்போம்' என்று என்னிடமே சிலர் சொல்லியிருக்கிறார்கள். எனவே, கச்சேரிகளில் புடவைக்கு தரவேண்டிய முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பொதுவாக என்னிடம் ஊதா, பச்சை, பிங்க் வண்ணப் புடவைகள்தான் அதிகமாக இருக்கும். அல்லது, இந்த ஷேட்ஸ் இருக்கக்கூடியப் புடவைகளாகத்தான் விரும்பி வாங்குவேன். மிக முக்கியமான கச்சேரிகளில், மேடை அலங்கார வண்ணத்தை கேட்டறிந்து, அதற்குப் பொருத்தமான நிறத்தில் உடுத்துவேன். நான் உடுத்திச் செல்லும் புடவை பெரும்பாலும் மேடைக் கலரோடு மெர்ஜ் ஆகாமல் பார்த்துக்கொள்வேன். ஒரே புடவையை அடிக்கடி உடுத்துவதைத் தவிர்க்க, அதிகம் பயன்படுத்தியவற்றை தெரிந்தவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். எப்போது நண்பர்களோடு வெளியில் சென்றாலும், பட்டுப்புடவை ஷாப்பிங் நிச்சயம் உண்டு.
ஆரம்பத்தில் தாவணி உடுத்திதான் கச்சேரிகளில் பாடினேன். தம்புரா வாசிக்கும்போதுகூட தாவணிதான் உடுத்தியிருக்கிறேன். பிறகு முழுக்க முழுக்க காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு மாறிவிட்டேன். பத்ம பூஷன் விருது வாங்கியபோதுகூட, என் மனதுக்கு நெருக்கமான காஞ்சிப் புடவைதான் உடுத்தியிருந்தேன். 'போத்தீஸ் பரம்பரா பட்டுக்கு அம்பாஸிடராக இருந்ததால், நிறைய காஞ்சிப் பட்டுகள் அங்குதான் வாங்கினேன். இது மட்டும் அல்லாது, நல்லி, துளசி, ஆரெம்கேவி என பல இடங்களில் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை வாங்குவேன். எங்கு நல்லப் புடவைகள் கிடைத்தாலும் வாங்கிவிடுவேன்.
திருமணப் பட்டு, அம்மா வீட்டில் சீராகக் கொடுத்த பட்டுப்புடவைகள் எல்லாம் எப்போதும் எனக்குப் பொக்கிஷம். கோவையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், மான், மயில், அன்னம் வேலைப்பாடுகள் செய்த, சிவப்பு, மஞ்சள் காம்பினேஷன் பட்டுப்புடவையை அன்புப் பரிசாக அனுப்பியிருந்தார். அதை நிறைய மேடைகளில் உடுத்தியிருக்கிறேன். 20 வருடத்துக்கும் மேல் ஆனதால், இப்போது அதற்கு ஓய்வு கொடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன்."

மஹதி
''எனக்குப் பெரும்பாலும் டெம்பிள் பார்டர் பட்டுப் புடவைகள் பிடிக்கும். பிரைட் கலர்களில்தான் புடவையைத் தேர்ந்தெடுப்பேன், டல் கலர்களைத் தவிர்த்துவிடுவேன். பிங்க், சிவப்பு, ஊதா நிறப் புடவைகள் எல்லாம் கச்சேரி மேடைக்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
கல்லூரி முதல் வருடத்தில் இருந்தே, கச்சேரிக்கு ஒரிஜினல் காஞ்சிப் பட்டுப் புடவைதான் என்னுடைய ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ். அதை உடுத்தும்போது பாசிட்டிவ் எனர்ஜி, சந்தோஷம், தைரியம் எல்லாமே அதிகமாகக் கிடைக்கும். அந்தப் புடவைகளின் கனமே அழகு. சில்க் காட்டன், சில்க் மிக்ஸ்டு புடவைகளுக்கு எல்லாம் நோ.
நல்லி, குமரன், சுந்தரி, பாலம் சில்க்ஸ், பரிசரா ஆன்லைன் வெப்சைட்... இங்கெல்லாம்தான் பொதுவாகப் புடவைகள் வாங்குவேன். ஜூவல்லரிகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவேன். கச்சேரியில் ஒருமுறை உடுத்திய புடவையை, இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் உடுத்த மாட்டேன்.
சிங்கிள் ப்ளீட் வைத்துதான் புடவை கட்டுவேன். ஹாஃப் அண்ட் ஹாஃப் புடவையாக இருந்தால் மட்டுமே, ப்ளீட் வைத்து உடுத்துவேன். டிசைனிங் பிளவுஸ் தைக்க, பிரத்யேக டிசைனர்கள் கைவசம் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் சீஸனுக்கு, அப்பா வீட்டில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு பட்டுப் புடவைகளாவது வந்துவிடும். அதேபோல, கணவர், தோழிகள் என அனைவரும் பட்டுப் புடவைகள் பரிசளிப்பார்கள். இப்படி என்னிடம் உள்ள பல புடவைகள் நான் பரிசாகப் பெற்றது என்பதால், எல்லாமே எனக்கு ஸ்பெஷல்தான்!"

ஹரிபிரியா(பிரியா சகோதரிகள்)
''10, 15 வயதில் இருந்து நானும் அக்கா சண்முகபிரியாவும் பாட ஆரம்பித்துவிட்டோம். 16, 17 வயதில் சுடிதார் அணிந்து பாடியிருக்கிறோம். அதற்குப் பிறகுதான் பட்டுப் புடவை உடுத்த ஆரம்பித்தோம். ஒவ்வொரு கச்சேரியிலும் ஆடிட்டோரிய விளக்கு வெளிச்சத்தைப் பொருத்து புடவைகள் உடுத்துவது எங்கள் வழக்கம்.
ஆரம்பத்தில் கச்சேரிகளின்போது புடவை கட்டுவதில் அம்மா, தோழிகள் என உதவியாக இருந்தாலும் சமயங்களில் சரியாக அமையாது. எனவே, அதற்காகவே ஒருவரை உதவிக்கு வைத்திருந்தோம். அதற்குப் பிறகு, நன்றாக கட்டிப் பழகிகொண்டோம்.
ஆரம்பத்தில் இருந்தே தி.நகர் குமரன் சில்க்ஸில்தான் புடவைகள் வாங்குகிறோம். அது எங்களுக்கு ராசியும்கூட. அவர்களும் எங்களின் ரசனைக்கு ஏற்றவாறு பிரத்யேகமாகப் புடவைகளை வரவழைப்பார்கள். பொதுவாக ஜூவல்லரியில் கோல்டன் பீட்ஸ், ரூபி, எமரால்டு கற்களை பதித்து அணிவது எங்களுக்குப் பிடிக்கும்.
நாங்கள் இருவரும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் ஆடைகள் அணிவோம். சில நேரங்கள் இரண்டு புடவைகள் ஒரே மாதிரி கிடைக்காமல் போகும். அப்போது கலர் மட்டும் வேறு, டிசைன் மட்டும் வேறு என்று காம்ப்ரமைஸ் செய்துகொள்வோம். ஆனால், கச்சேரிகளில் இருவரும் ஒரே மாதிரி உடுத்தினால்தான் அழகு என்பதால், அதில் எந்த சமரசமும் இல்லாமல், ஷாப்பிங், பிளவுஸ் என அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவிடுவோம். கச்சேரிக்கு உடுத்திக்கொள்ளலாம் என்பதால், அக்கா அவர் திருமணத்துக்கு புடவைகள் எடுத்தபோது, நானும் புடவை எடுத்துக்கொண்டேன். நான் என் திருமணத்துக்குப் புடவைகள் எடுத்தபோது, அக்காவும் அதேபோல் ஒரே மாதிரியானப் புடவையை எடுத்துக்கொண்டார்!"